சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எதிர்வரும் 12ஆம் தேதி தமிழகம் வருகிறார். அவருடன் இரு துணை ஆணையர்களை உள்ளடக்கிய குழு ஒன்றும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதி பங்கீடுகள் குறித்து தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தல் அநேகமாக மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகக்கூடும்.
இந்நிலையில், தமிழகத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் முடிவடைந்துள்ளன. இறுதி வாக்களார் பட்டியல் எதிர்வரும் 17ஆம் தேதி வெளியிடப்படும்.
இதனிடையே, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வரும் தலைமைத் தேர்தல் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு இரண்டு நாள்கள் சென்னையில் முகாமிட்டு ஆலோசனை நடத்தவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில், பிப்ரவரி மாத இறுதிக்குள் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

