சதீஷ் பார்த்திபன்
இதோ... தமிழ்நாடு மேலும் ஒரு கோடை காலத்துக்குள் வியர்க்க விறுவிறுக்க அடியெடுத்து வைத்திருக்கிறது.
எங்குத் திரும்பினாலும், மக்கள் கூட்டமாகக் காணப்படும் இடங்களிலும்கூட அதிக ஆள் நடமாட்டமின்றிக் காணப்படுகிறது.
‘வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி...’ என்ற திரைப்பாடல் பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில், “நாங்கள் எங்கே வெயிலோடு விளையாடுகிறோம்... வெயில்தான் எங்களுடன் விளையாடுகிறது,” எனப் பொதுமக்கள் புலம்புகிறார்கள்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று செய்தி வெளியான நாள்கள் மலையேறிவிட்டது. அண்மைக்காலங்களில் இந்தியாவில் வெயிலின் ‘கொடுமை’ என்பதுதான் பொருத்தமான வாக்கியமாக உள்ளது.
உடல்நலப் பாதிப்பு, நீர் பற்றாக்குறை, விவசாயம் பாதிக்கப்படுவது, ஏரி, குட்டை, குளங்கள் வறண்டு போவது, அனைத்துக்கும் மேலாக வெயிலின் ஆவேசத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏற்படும் உயிரிழப்புகள், காட்டுத்தீயால் மரங்களும் தாவரங்களும் வாடி, கருகி அழிதல் என வெயிலின் ஆட்டம் ஆண்டுதோறும் வேகமெடுக்கிறது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், பருவ நிலையால் பாதிக்கப்படும் நாடுகள் குறித்து யோசித்தாலே அச்சமாக உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். வருங்காலத்தில் வெயில், குளிர் எனப் பலவிதமான பருவ காலங்கள் இருக்காது. வெயில் என்றால் வெயில், குளிர் என்றால் குளிர் என உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பருவ நிலைதான் காணப்படும் என்கிறார்கள்.
அதற்கான அறிகுறியாகவே பாலைவனப் பகுதிகளான துபாய், சவூதி அரேபியா போன்ற பகுதிகளில் திடீரெனப் பெய்யும் மழையையும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கையும் காண நேரிடுகிறது என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
புரதம் தரும் வெயில் நல்லது
என்னதான் வெயில் கொடுமையானது என மனிதன் புலம்பினாலும், வெயில் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதையும் நாம் மறுக்க இயலாது.
வெயிலில் பல புரதச் சத்துகள் உள்ளன. அதனால்தான் மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லால் சூரியக்குளியலை மேற்கொள்கிறார்கள்.
நல்லது செய்யும் வெயில் எப்படி மனிதனுக்கு எதிரியாகிப் போனது? வன அழிப்புத்தான் இந்தப் பகைக்குக் காரணம். தமிழகத்திலும் இந்தத் தவறு பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
ஐநா மன்றத்தின் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் இரண்டரைக் கோடி வனப்பகுதிகள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்படுகின்றன.
வன அழிப்பை நிறுத்தி, வன வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள்படி, தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பிலான புது வனப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தமிழகத்தில் 250 ஏக்கர் அளவிலான புது வனப்பரப்பு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
தெற்கு, வடக்கு வியட்னாம் இடையே ஏற்பட்ட மோதலின்போது ரஷ்யாவும் அமெரிக்காவும் வெவ்வேறு தரப்புக்கு ஆதரவாகக் களமிறங்கின.
அப்போது அமெரிக்கா மேற்கொண்ட வன அழிப்பு தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்களால் வியட்னாமில் உள்ள எட்டு லட்சம் ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி அழிந்துபோனது. பாதிக்கப்பட்ட பகுதியில் இன்றளவும் புல் பூண்டுகூட முளைக்கவில்லை என்கிறார்கள்.
தண்ணீர் பற்றாக்குறை
கோடைக் காலம் என்றாலே இரவில் தூக்கம் போச்சு என்ற புலம்பலைவிட தமிழக மக்களின் முதன்மைப் புலம்பலாக இருப்பது, குடிக்கக்கூட தண்ணீர் இல்லை என்பதுதான்.
ஒரு குடம் தண்ணீர் 50 ரூபாய் என்று கூவி விற்கும் காட்சிகளையும்கூட மக்கள் பார்த்துவிட்டனர்.
சிங்கார சென்னை, இன்னொரு சிங்கப்பூர் என்று காட்சிகள் மாறப்போவதாக நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களில் பலருக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் தண்ணீரில்லா தமிழகம், குட்டி சோமாலியாகவே காட்சி தருகிறது.
கலியுக கோடை வெயிலால் பூமிக்கு ஆபத்து
கலியுக கோடை வெயிலால் பூமிக்கு ஆபத்து என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள். இதுகுறித்து ‘சமயம்.தமிழ்’ ஊடகத்தில் இடம்பெற்றுள்ள மோகன பிரியாவின் கட்டுரையில், ஏறக்குறைய 7,000 வசனங்கள் கொண்ட விஷ்ணு புராணத்தில் மனிதனின் வாழ்க்கை, மறுபிறப்பு பற்றிய பல குறிப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கலியுகத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமி ஒரு நாள் பலவீனமடையும். அப்போது, ஆண்டுக்கணக்கில் வறட்சி ஏற்படும். உலகம் முழுவதும் இதன் தாக்கம் இருக்கும். பூமியின் வளம் குறையும்.
“தண்ணீர் ஒரு விலைமதிப்பற்ற பொருளாக மாறும். வெயில் நாள்கள் நெருப்புபோல இருக்கும். சூரியன் வானத்திலிருந்து நெருப்பை கக்கும். நரகத்தில் இருப்பதுபோல் மக்கள் உணர்வார்கள்,” என்று விஷ்ணு புராணம் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார் மோகன பிரியா.
வீட்டுச்சிறைக் காலமாக மாறிய கோடைக்காலம்
இந்தியாவில் கடந்த ஆண்டு வெயிலின் தாக்கத்தால் 374 பேர் பலியாகிவிட்டனர். ஏறக்குறைய 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் முந்தைய ஆண்டுகளைவிட மோசமான வெப்ப அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் முன்பெல்லாம் கோடைக் காலம் வந்துவிட்டால் சிறார்கள் உற்சாகம் அடைவார்கள். வீட்டுக்கு அருகே உள்ள விளையாட்டுத் திடல்கள், பூங்காக்கள், திறந்தவெளிகளில் ஒன்றுகூடி மகிழ்ச்சியடைவார்கள்.
ஆனால், இப்போது கோடை என்பது சிறார்களுக்கும் முதியோர்க்கும் வீட்டுச்சிறைக் காலமாக மாறிவிட்டது.
சரி... வெறும் புலம்பலுக்குத்தான் இந்தக் கட்டுரையா என்று கேட்பீர்கள் எனில், இல்லை என்பதே அதற்கான பதில்.
தமிழக அரசும் சமூக ஆர்வலர்களும் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, மரம் வளர்ப்பு, கோடைக் கால உடல்நலப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதற்காக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போக்குவரத்து காவல்துறையினருக்கு ‘ஏசி ஹெல்மெட்’, போக்குவரத்து ஊழியர்களுக்கு நீர் மோர், இளநீர் ஆகியவற்றை வழங்கத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில், தண்ணீர், மோர்ப் பந்தல்கள் அமைத்தல், நுங்கு, தர்பூசணி, கிர்ணி பழம் ஆகியற்றை விநியோகித்தல் எனத் தன்னார்வலர்கள் பல்வேறு நல்ல செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நடிகர், நடிகைகள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் இதுபோன்ற பயனுள்ள முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள்.
மனிதன் தன்னால் முடிந்தவரை பல வழிகளிலும் இயற்கையை சீரழித்துவிட்டான். உடனடியாக அந்தச் சீரழிவிலிருந்து மீள்வதற்கு மரங்களை வளர்த்து, இயற்கை அன்னையைக் குளிர்விப்பதே ஆகச் சிறந்த உதவி.
‘அறம் செய்ய விரும்பு’ என்பர். ஆனால், ‘மரம் செய்ய விரும்பு’ என்பதே இன்றைய தேவை.