சென்னை: தமிழகம் மீண்டும் கன மழையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. வங்கக் கடலில் நிலவும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு வங்கக் கடல், கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து தென் கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 1,050 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்றார்.
இது மிக விரைவில் புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் கடல் பரப்பில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் காரணமாக நவம்பர் 28 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்றும் (நவம்பர் 27) மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.
அடுத்த சில நாள்களில் எந்தெந்த மாட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்ற முன் அறிவிப்பையும் பாலச்சந்திரன் வெளியிட்டார். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
29, 30ஆம் தேதிகளிலும் இந்த மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தொடர்புடைய செய்திகள்
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கெனவே மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக பாலச்சந்திரன் கூறினார்.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது:
இதற்கிடையே, வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடையக்கூடும் என வானிலை நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வேதாரண்யம் கடற்பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
வானிலை ஆய்வு மையத்தின் தொடர் எச்சரிக்கையை அடுத்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நவம்பர் 27 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 கல்லூரிகளில் நடைபெற இருந்த பருவத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்பு, நிவாரணப் பணிகளைப் பெறுவதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுக்கள்:
மேலும் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் ஆறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இக்குழுக்கள் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சென்னை, நெல்லை மாவட்டங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அக்குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.