புதிய கடன் பெற முடியாமல் தவிக்கும் தமிழக விவசாயிகள்

புதிய கடன் பெற முடியாமல் தவிக்கும் தமிழக விவசாயிகள்

சித்திரிப்புப் படம்: இந்து தமிழ் திசை

17 Nov 2026 - 7:26 pm

2 mins read

நாகர்கோவில்: தமிழகத்தில் வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட வேண்டிய பயிர்க்கடன் தள்ளுபடி நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், நடப்பாண்டுக்கான புதிய கடன்களைப் பெறமுடியாமல் ஏறக்குறைய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது, விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, தவெக அரசு பொறுப்பேற்றதும் முதலில் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்களும் பின்னர் ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புகள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகம் முழுவதும் இரண்டாம் போக நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. சாகுபடிச் செலவுகளுக்காகப் புதிய கடன் பெற மாவட்டம் வாரியாக உள்ள வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், புதிய கடன் வழங்குவதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை எனக் கூறி, சங்க அலுவலர்கள் விண்ணப்பங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு கடன்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

பழைய கடன் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் அதனைத் திரும்பச் செலுத்தாததால், அவர்களுக்குப் புதிய கடனும் கடன் தொகையில் 10 விழுக்காடு வழங்கப்படும் மானிய விலை ரசாயன உரமும் கிடைக்காமல் விவசாயப் பணிகள் முடங்கியுள்ளன.

ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடிக்கான அரசாணை கடந்த வாரம்தான் மாவட்டங்களுக்கு வந்துள்ளது என்றும் தற்போது பயனாளிகளின் விவரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது என்றும் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தள்ளுபடி பணிகள் முடிந்து, அரசு அனுமதி அளித்த பிறகே புதிய கடன்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் கைவிரிப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதனால், குமரி மாவட்டத்தைவிட அதிக வேளாண் பரப்பு கொண்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ள குமரி மாவட்ட வேளாண் பாசனத் தலைவர் வின்ஸ் ஆன்றோ, தள்ளுபடி நடைமுறைகளை விரைந்து முடித்து உடனடியாகப் புதிய கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்