தமிழகத்தில் சாலைப் பேரணி, ஊர்வலங்களுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகள்

2 mins read
71c933d2-04e9-41b5-ad55-cd75c4bd4301
அனைத்துக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த தமிழக அரசு, தற்போது பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. - படம்: புதிய தலைமுறை
multi-img1 of 2

சென்னை: தமிழகத்தில் இனி நடைபெறும் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி, ஊர்வலங்களுக்கு எனத் தனியாக வழிகாட்டி நெறிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. கரூர் துயரச் சம்பவத்தையடுத்து பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அவசியம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இதையடுத்து பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பல்வேறு தரப்பினரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் கருத்தைக் கேட்டறிந்து பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, அனைத்துக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த தமிழக அரசு, தற்போது பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வரையறுக்கப்பட்ட இடங்களில் நிகழ்ச்சி நடத்த பத்து நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு பரிந்துரைத்த இடங்களுக்குப் பதிலாக வேறு இடங்களில் கூட்டம் நடத்த விரும்பினால் பத்து முதல் முப்பது நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைப் பேரணிகள், முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும் நிகழ்வுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பேரணி தொடங்கும் இடம், புறப்படும் இடம், நேரம் ஆகியவற்றைத் துல்லியமாக அறிவிக்க வேண்டும், மாற்றுப்பாதையில் செல்ல அனுமதி இல்லை, மொத்த நிகழ்ச்சியும் மூன்று மணி நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும், பேரணியில் பங்கேற்கும் முக்கியத் தலைவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு எங்கும் உரையாற்ற அனுமதி இல்லை.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தும் ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூட்டத்தை முறைப்படுத்த ஒவ்வொரு 50 பேருக்கும் ஒரு தன்னார்வலரை நியமிக்க வேண்டும் என்றும் புதிய வழிகாட்டி நெறிமுறை தெரிவிக்கிறது.

எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையைவிட 50% மக்கள் கூடுதலாகத் திரண்டால் அது விதிமீறலாகக் கருதப்படும். இதற்காக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பங்கேற்பாளரின் நலன் கருதி குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்யப்பட வேண்டும். காவல்துறை, தீயணைப்பு வாகனங்கள் தடையின்றி செல்ல தனிப்பாதையை உறுதி செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறார்கள் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பதையும் நெரிசலான இடங்களில் சிக்காமல் இருப்பதையும் கவனிப்பது ஏற்பாட்டாளரின் பொறுப்பு என்றும் பேரணியின்போது சாலையின் ஒரு பாதியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி முடிந்த கையோடு அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தி, பழைய நிலையில் ஒப்படைக்க வேண்டியது ஏற்பாட்டாளரின் கடமை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்