கோவை: தமது தொலைபேசயில் பேசும்போது தமிழக அரசு ஒட்டுக்கேட்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக அரசு தம்மைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
அவரது இக்குற்றச்சாட்டு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு கோவை பாஜக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய நயினார் நாகேந்திரன், பாஜகவின் தேர்தல் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு பற்றியும் சமூக ஊடகங்களில் கட்சி நிர்வாகிகள் யாரும் பதிவிட வேண்டாம் என அறிவுறுத்தினார்.
“சமூக ஊடகங்களில் காணப்படும் பதிவுகளை வைத்து பாஜகவினரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் எனத் திட்டமிடுகிறார்கள்.
“தொலைபேசியில் பேசினால் ஒட்டுக்கேட்கவும் தயாராகி வருகின்றனர். தமிழக அரசு எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. யார், என்ன செய்கிறார்கள் என்பதை திமுக அரசு கண்காணிக்கிறது.
“பாஜக தொண்டர்கள் அனைவரும் தொலைபேசியில் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தொடர்புடைய செய்திகள்
“டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேசம், உ.பி ஆகிய மாநிலங்களுக்கு அமித்ஷா சென்று திரும்பியதும், அங்கெல்லாம் பாஜக ஆட்சி அமைந்தது.
“தற்போது தமிழகத்துக்கு வந்து சென்றுள்ளார். இங்கும் பாஜக ஆட்சி அமையும்,” என்றார் நயினார் நாகேந்திரன்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களைப் பாதுகாக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு என்றார்.
“எனவே, பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் தேர்தல் வெற்றிக்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். அனைவரையும் பாதுகாக்கும் கடமை எனக்கு உள்ளது. அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.
“தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர்கள் கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். அதனால் எனது பணி எளிதாகிவிட்டது,” என்றார் நயினார் நாகேந்திரன்.
தமிழகத்தில் அரசில் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மீது முன்பு ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தலைதூக்கி உள்ளது.