அரிசி, பருப்பு இருப்பு வைக்க தமிழக அரசு கட்டுப்பாடு

அரிசி, பருப்பு இருப்பு வைக்க தமிழக அரசு கட்டுப்பாடு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

14 Nov 2026 - 4:21 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் அரிசி, பருப்பு வகைகளின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் சந்தையில் தட்டுப்பாடின்றி அவை கிடைப்பதை உறுதிசெய்யவும் அவற்றை இருப்பு வைப்பதற்கான புதிய வரம்புகளை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு, உணவு, பயனீட்டாளர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, வியாபாரிகள், ஆலை உரிமையாளர்களுக்கான இருப்பு வரம்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மொத்த விற்பனையாளர்கள் அதிகபட்சமாக 2,000 டன் வரை மட்டுமே நெல் அல்லது அரிசியை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சில்லறை வியாபாரிகள் ஒவ்வொருவரும் 8 டன் வரை மட்டுமே இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்குத் தேவையான அளவை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும்.

துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றைப் பொறுத்தவரை, மொத்த விற்பனையாளர்கள் தலா 200 டன் வரை மட்டுமே இருப்பு வைக்க முடியும். சில்லறை விற்பனையாளர்கள், பெரிய விநியோகத் தொடர் வணிக நிறுவனங்கள் ஒவ்வொரு பருப்பு வகையிலும் தலா 5 டன் வரை மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

பருப்பு ஆலைகளைப் பொறுத்தவரை, கடந்த மூன்று மாத உற்பத்தி அளவு அல்லது ஆண்டு உற்பத்தித்திறனில் 25 விழுக்காடு ஆகியவற்றில் எது அதிகமோ, அந்த அளவிற்கு மட்டுமே இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அரிசி, பருப்பு வகைகளை இறக்குமதி செய்வோர், சுங்கத்துறையின் அனுமதி கிடைத்த நாளிலிருந்து 45 நாள்களுக்குமேல் அவற்றை இருப்பு வைத்திருக்கக் கூடாது எனக் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வியாபாரிகள் தங்களிடம் உள்ள துவரம் பருப்பு, உளுந்து இருப்பு விவரங்களை மத்திய பயனீட்டாளர் விவகாரங்கள் துறையின் இணையத்தளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தற்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகப் பருப்பு வகைகளை இருப்பு வைத்துள்ள வியாபாரிகள், நவம்பர் 16ஆம் தேதிக்குள் அவற்றை வரம்புக்குள் குறைத்துக்கொள்ள வேண்டும் என அரசாணையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்