சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையின் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கூவம் ஆற்றை, அதன் பழமையான இயற்கை எழிலோடு மீட்டெடுக்கும் நோக்கில், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையில் சென்னை நதிகள் மறுசீரமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, அனைத்துலகத் தொழில்நுட்பத் தரம், நிபுணத்துவத்தை உறுதிசெய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் தொடக்க நடவடிக்கையாக, ஆற்றின் சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதிசெய்ய முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியில் மாதிரிப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அந்தப் பகுதியில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளன.
பொதுமக்கள் உடற்பயிற்சி செய்யவும் ஓய்வு நேரத்தைக் கழிக்கவும் ஏதுவான வழித்தடங்களும் இயற்கைச் சூழலை ரசிக்கும் வகையில் நதிக்கரையோரம் அமைக்கப்படும்.
மரக்கன்றுகள் நட்டுப் பசுமைப் பகுதிகளை விரிவாக்குதலும் பொதுமக்களுக்கான அடிப்படைச் சேவை மையங்கள், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் நவீன தொழில்நுட்ப உத்திகள், நகர்ப்புறச் சூழலை மேம்படுத்துதல் பொதுமக்களுக்குப் பயனுள்ள திறந்தவெளி இடங்களை உருவாக்குதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டம், கூவம் நதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
