சென்னை: தமிழக அரசு சார்பாக சிறார்களுக்கான அழகிய பெயர்களும் அவற்றுக்கான பொருளும் ஒருசேர அளிக்கும் இணையப் பக்கம் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் திமுக எம்எல்ஏவின் இல்லத்திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்பதே அனைவருக்குமான தமது வேண்டுகோள் என்றார்.
அவர் பேசியது தொடர்பான காணொளியைப் பகிர்ந்த ஒருவர், தமிழில் பெயர் வைக்க விரும்பினாலும், நல்ல பெயர்களையும் அவற்றுக்கான பொருளையும் தெரிந்துகொள்ள சரியான இணையத்தளங்கள் இல்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும், இதற்கான நடவடிக்கைகளை தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது இந்த எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.