புதுடெல்லி: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளை இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசு, கோவில் நிர்வாகம், பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ‘இந்து தர்ம பரிஷத்’ அமைப்பின் நிர்வாகி கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த ரிட் மனுவில், திருப்பரங்குன்றம் கோவில், மலையைத் தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோவிலில் உள்ள கல்தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீசுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டி.ஜி.வினய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 1923ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலையின் முழு உரிமையும் கோவிலுக்கே சொந்தமானது என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகம விதிகளின்படி, கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது என்றும் 1996ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோவில் நிர்வாகம் மட்டுமே பாரம்பரிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும், வேறு எங்கும் தன்னிச்சையாகத் தீபம் ஏற்றத் தடை உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நிலவும் மத நல்லிணக்கம், பொது அமைதியைப் பாதுகாக்க மாநிலக் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் முழுப்பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றன என்றும் கோவிலில் பூசைகள், தீபம் ஏற்றும் அனைத்து உரிமைகளும் கோவில் நிர்வாகத்துக்கே உரியவை என்றும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டிற்கு மாற்றக் கோரும் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
