சென்னை: தமிழகத்தில் அரசாணைகளை இனி தமிழில்தான் வெளியிட வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசுப்பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் பொது மக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு அம்மொழியிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த ராமேசுவரம் பாம்பன் பாலத்தின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திலிருந்து தமக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன எனக் கூறினார்.
அதுபோல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தியை மட்டும் ஊக்குவிப்பதாகக் கூறும் தமிழகத்தை ஆளும் திமுகவினர் ஒருவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போடத்தெரியாது என விமர்சனம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அரசுப் பணிகள் அனைத்திலும் தமிழை முதன்மைப்படுத்த தமிழக அரசு ஆணையிட்டது.
மேலும், தமிழகத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு தமிழ் மொழியை முதன்மைப்படுத்த மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற உத்தரவைத் தமிழக வளர்ச்சி, செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளைத் தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாகத் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறையின் மொழிபெயர்ப்புப் பிரிவுமூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அந்தந்தத் துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை கூர்ந்தாய்வு செய்யும்பொருட்டு தமிழ் வளர்ச்சி, செய்தித்துறையின் மொழிபெயர்ப்புப் பிரிவுக்கு அனுப்பவும் அரசு பரிந்துரைத்துள்ளது.