நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கும் தமிழக அரசு: மு.க.ஸ்டாலின்

1 mins read
6dee7184-ddc2-4c70-bc4d-f502ea99c5d8
ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி உண்ணும் மாதர்கள். - கோப்புப்படம்

சென்னை: ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்குத் தமிழக அரசு அரிசி வழங்குகிறது. இந்த ஆண்டிலும் அரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாக இருப்பது நோன்பு. மக்களின் பசியை அறிந்துகொள்ள வாய்ப்பாக இந்த நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரமலான் மாதத்தில் பள்ளி வாசலில் நோன்புக் கஞ்சி வழங்கப்படும்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வோர் ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

“கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025ஆம் ஆண்டிலும் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

“அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு, பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாள்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

“அதன்படி 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 18 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்,” என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்