சென்னை: தமிழக அரசின் திருமண உதவித் திட்டத்துக்காக 5,460 தங்க நாணயங்கள் வாங்க அம்மாநில அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஏழைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்குத் தமிழக அரசின் நிதியுதவித் திட்டங்கள் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் நான்கு வகையான திருமண நிதியுதவித் திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கத் தேவைப்படும் 5,640 எண்ணிக்கையிலான 8 கிராம் கொண்ட 22 காரட் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய வேண்டி, தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுவதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.