சென்னை: தமிழக அரசின் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்குகளிலிருந்து இணையவழியில் ரூ.223 மில்லியன் மோசடி செய்த வழக்கில் இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் ஏற்கெனவே லோகநாதன், அண்ணாதுரை, செல்லபாண்டியன் ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் பிடிபட்டுள்ளனர்.
கிராமப்புற ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட தமிழக அரசின் 15வது நிதிக்குழு சுகாதார மானிய நிதியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் தனி வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்த அந்நிதியை மோசடிக் கும்பல் அக்டோபர் 12ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிக்குள் 46 பரிவர்த்தனைகள்மூலம் எடுத்துள்ளது.
நாகப்பட்டின மாவட்டம் கீழையூர், ராமநாதபுர மாவட்டம் மண்டபம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய மூன்று வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் பயனர் விவரங்கள் இம்மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருடப்பட்ட பணம் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிடப்பட்டது. அவ்வாறு பணத்தை மாற்றிவிட 24 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
அதிகாரிகளின் கடவுச்சொற்கள் திருடப்பட்டதா அல்லது வங்கியின் இணையப் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதா எனத் துறைசார் விசாரணை நடந்து வருகிறது.
அத்துடன், சென்னைப் பெருநகரக் காவல்துறையின் இணையக் குற்றப் பிரிவும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், மோசடித் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த இணையவழி மோசடியில் நைஜீரியக் கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என்று இணையக் குற்றப் பிரிவினர்க்கு ஐயம் எழுந்துள்ளது.
இதனிடையே, “பொதுமக்கள் யாரும் தங்களது கைப்பேசி எண்ணையோ வங்கிக் கணக்கையோ பிறருக்கு வழங்க வேண்டாம்; பணம் தருவதாகக் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம்,” என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
