தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரினச் சமநிலை தவறி வறண்ட பூமியாகிறதா தமிழகம்?: ஓர் அலசல்

5 mins read
4d8b7050-6186-4cdd-a9c4-c106e0e20d15
இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் விபத்து, வேட்டையாடுதல் காரணமாக உயிரிழக்கின்றன. - படம்: ஊடகம்
multi-img1 of 2

வன விலங்குகள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 

காடுகள் இன்றி நீர்வளம் சிறக்காது. நீர்வளம் இன்றி வேளாண்மை வளப்படாது. எனவே, வளமான எதிர்காலத்திற்குக் காடுகள் அவசியம் எனில், காடுகள் வளம்பெற வன விலங்குகள் அவசியம் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

கொக்கை மனிதன் தின்றான். மனிதனைப் புழு தின்றது, புழுவை மீன் தின்றது, மீனைக் கொக்கு தின்றது, பின் மீண்டும் கொக்கை மனிதன் தின்றான் என்பது இயற்கையின் சுழற்சி.

ஒரு காட்டில் மான்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்பதான் சிங்கம், புலி எண்ணிக்கை இருக்கும். 

போதிய மான் கூட்டம் இல்லாதபோது சிங்கமும் புலியும் உணவின்றி மாண்டுபோகும். இதனால் மான் கூட்டம் பெருகி, பலப்பல சிக்கல்களை உண்டாக்கும். 

இந்த வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் ஆபத்துதான், கூடினாலும் ஆபத்துதான். ஆனால் இந்தக் கூட்டலும் குறைதலும் இயற்கையாக நிகழ வேண்டும்.

இல்லாவிட்டால், உலகில் உயிரினச் சமநிலை தவறி, வறண்ட பூமியாக ஆகிவிடும்.

இன்று விலங்குகளின் வழித்தடங்களை அடைத்து, கட்டடங்கள் கட்டுகிறார்கள்.

இதனால் யானைப்பாதைகள் அடைக்கப்பட்டு, அவை ஊருக்குள் நுழைகின்றன. மற்றொரு புறம் யானைப்பாதையில் ரயில் போக்குவரத்து. இதனால் இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் விபத்து, வேட்டையாடுதல் காரணமாக உயிரிழக்கின்றன.

மனிதன் இயற்கையை சார்ந்து வாழ்கிறான். நமக்கு பெருங்கொடையாக அமைந்திருப்பதே இந்த இயற்கை வளங்கள்தான். இதைப் புரிந்துகொண்ட பிறகே நாம் இயற்கையை தெய்வமாக வணங்கத் தொடங்கினோம்.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மொத்த வனப்பரப்பளவு ஏறக்குறைய 635,000 ஹெக்டர் எனக் கணக்கிடப்பட்டது. இதில் கணிசமான வனப்பகுதி பல்வேறு காரணங்களால் அழிவைச் சந்திக்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மொத்த இயற்கை வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக இருத்தல் அவசியம் என்கிறார்கள் இயற்கை வள நிபுணர்கள்.

ஆனால் இந்தியாவிலோ 30% ஆக இருக்க வேண்டிய வன வளமானது இப்போது 19 விழுக்காடாக மட்டுமே உள்ளது. தமிழகத்திலோ, 13% மட்டுமே வனப்பகுதியாக உள்ளன.

இந்தப் புள்ளி விவரங்களும்கூட கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பானவை. தற்போதைய நிலைமை மேலும் கவலைக்கிடமாக உள்ளது என்கிறார்கள் இயற்கை வள ஆர்வலர்கள்.

நகர, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏராளமான கிராமங்கள், சிற்றூர்களில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்கள் குறைந்தால் வெப்பம் அதிகரிக்கும். பல உயிரினங்கள் அழியும் என்பதும் நமக்குத் தெரியும்.

இத்தகைய ஆபத்தை தடுக்கவும் தவிர்க்கவும் ஏதுவாக மாநில வன உயிரின வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய தேசிய பல்லுயிர் ஆணையமானது அவ்வப்போது பல்வேறு முக்கியமான புள்ளி விவரங்களுடன் கூடிய அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.

அதன் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள தாவரங்களின் வளமை என்பது இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளது என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஆண்டு நிலவரப்படி இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் கூடுதலான வனப்பகுதி அதிகரிப்பு நடந்துள்ளதாக இந்திய அரசும் தெரிவித்துள்ளது. மேலும் 5 புலிகள் காப்பகங்கள், 5 யானை காப்பகங்கள், 3 உயிர்க்கோளகக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள் என தமிழகம் வன உயிரின வளமைமிக்க ஒரு மாநிலமாகத் திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக தேவாங்கு உயிரினத்திற்கென்று தமிழகத்தின் கடவூர் வனத்தில் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக கடல்பசுக்களைப் பாதுகாக்க கடல்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடாவில் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கழுவேலி பறவைகள் காப்பகம், அகத்தியர்மலை யானைகள் காப்பகம், நஞ்சராயன் குளம் பறவைகள் காப்பகம், காவேரி தெற்கு காட்டுயிர்க் காப்பகம் போன்றவற்றை தமிழக அரசு குறுகிய காலத்தில் அறிவித்துச் செயல்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டத்தை ரூ.920 கோடி செலவில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவன உதவியுடன் செயல்படுத்தப்பட ஒப்பந்தமாகி உள்ளது. 

இதுமட்டுமின்றி, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் குன்றிய வன நிலப்பகுதிகளை மீளுருவாக்கம் செய்யும் திட்டத்திற்கு ரூ.481 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வனவிலங்குகளின் வேட்டை, கடத்தல் உள்ளிட்ட பிற குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வன மற்றும் வன உயிரின குற்றத் தடுப்புப் பிரிவு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. 

இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

சுமார் 282 எக்டேர் பரப்பளவுள்ள வனப்பரப்பில் அந்நிய களைத்தாவரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 

தேசிய பசுமைப்படை

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பணிகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது 

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் நாட்டில்தான் 1998 ஆம் ஆண்டில் மூன்று மாவட்டங்களில் 170 பள்ளிகள், 10 கல்லூரிகளில் சூழல் மன்றங்கள் துவங்கப்பட்டு அதன் பின்னர் மாவட்டந்தோறும் 40 பள்ளிகள் வீதம் 1,200 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தேசிய பசுமைப்படை என்னும் திட்டத்தினை 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தி தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் தலா 250 பள்ளிகள் வீதம் 8,000 பள்ளிகளில் சூழல் மன்றங்கள் நிறுவப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

சூழல் மன்றங்களில் அங்கம் வகித்துக் கொண்ட மாணவர்கள் மூலம் கருத்துக் காட்சிகள், கடற்கரையை தூய்மைப்படுத்துதல், கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சங்ககாலம் தொடங்கி, தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் அனைத்திலும், ஆறுகள், மலைகள், தாவரங்கள், விலங்குகள் குறித்த முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இன்றைய சூழலில் நீர் நிலைகள் அழிந்தும் வன வளங்கள் அருகியும் வருவதை கண்கூடாகக் காண்கிறோம்.

இது ஒருவித சோகம் என்றால், இத்தகைய நிலையால், மனித குலம் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கண்டுகொள்ளாமல் நம்மில் பலர் ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று நீக்குப்போக்காக இருப்பது அதைவிட பெரும் சோகம்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள மொரீஷியஸ் தீவுப்பகுதியில் வாழ்ந்த பறவை இனம் டோடோ (DODO).

இது இறக்கையுள்ள பறவை. ஆனால் பறக்காது, விரைந்து ஓடாது. ஒரு குழந்தையைப் போல தத்தித்தத்தி நடக்கும்.

இந்த தீவுக் கூட்டங்களில் மனித நடமாட்டம் இல்லாத காலங்களில் புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க வந்த போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் இந்த தீவில் வந்து இறங்கிய பிறகு டோடோ பறவையைக் கண்டனர்.

யார் கூப்பிட்டாலும் ஒரு குழந்தையைப் போல் அருகே வரும்  இயல்புடைய டோடோ, இந்த மனிதர்களின் சூட்சமம் அறியாமல் அருகே சென்றது. அதைப் பிடித்து சமைத்தனர்.

டோடோவின் மிகுந்த மென்மையான இறைச்சி அவர்களைக் கவர, தொடர்ந்து கண்ணில் கண்ட டோடோவையெல்லாம் தின்று தீர்த்தனர். 

அடுத்த சில ஆண்டுகளிலேயே அப்படி ஒரு பறவை இருந்த அடையாளமே இல்லாமல் அழித்துவிட்டனர்.

இனி இப்படிப்பட்டட கொடூரம் எங்கும் நிகழக்கூடாது என்றே போராடுகின்றன உலக அரசுகள். 

இதே நிலை நீடித்தால் வனம் அழிந்து பூமி வெறும் மேடு பள்ளம் நிறைந்த நிலமாகிவிடும். 

அந்த இழிநிலை நேராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

குறிப்புச் சொற்கள்