தமிழகத்தில் ‘வீட்டு மேற்கூரை சோலார் மானியத் திட்டம்’ தொடக்கம்

தமிழகத்தில் ‘வீட்டு மேற்கூரை சோலார் மானியத் திட்டம்’ தொடக்கம்

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

22 Sep 2026 - 6:24 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் வீடுகள்தோறும் பசுமை மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ‘தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

அதற்கான சிறப்பு இணையத்தளத்தை மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னையில் தொடங்கி வைத்தார்.

எதிர்வரும் மார்ச் 2027க்குள் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரைகளில் சூரிய மின்சக்திக்கான அமைப்புகள் நிறுவப்படுவதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசின் மானியத்துடன், தமிழக அரசின் சிறப்புக் கூடுதல் மானியமும் சேர்த்து பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளது. இதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ஒரு கிலோவாட் திறன்கொண்ட சோலார் கட்டமைப்புக்கு ரூ.35,000, இரண்டு கிலோவாட்டுக்கு ரூ.70,000, மூன்று கிலோவாட்டுக்கு ரூ.1,00,000 வரை மானியமாக வழங்கப்படும்.

பொதுமக்கள் எளிதாக விண்ணப்பிக்கவும் மானிய நிலவரத்தைக் கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் மானியம் கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன், மாநில அரசின் கூடுதல் மானியம் தானாகவே பயனாளிகளுக்கு விடுவிக்கப்படும் என்பதால் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர் செயலி மூலமாகவும் பொதுமக்கள் இச்சேவைகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, பசுமை ஆற்றல் கட்டமைப்பில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய தூய்மையான மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வீடுகள்தோறும் மேற்கூரை சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இந்தியப் பிரதமரின் மேற்கூரை சூர்ய மின்சக்தி திட்டத்தின்மூலம் 1,13,714 மேற்கூரை சோலார் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 97,732 சோலார் மின் இணைப்புகள் வெற்றிகரமாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இதன்மூலம் 337.49 மெகாவாட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் தாழ்வழுத்த, உயரழுத்த மின் இணைப்புகள் உட்பட மொத்த மேற்கூரை சோலார் மின் உற்பத்தி நிறுவுதிறன் 1,859.27 மெகாவாட்டைக் கடந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சூரிய மின்சக்திமானியம்திட்டம்வீடுகள்மின்சாரம்உற்பத்தி