தமிழக சட்டம் ஒழுங்கு: தலைவர்கள் கடும் கண்டனம்

தமிழக சட்டம் ஒழுங்கு: தலைவர்கள் கடும் கண்டனம்

2 mins read
b7fd08e1-b149-4ec6-a78d-9932438030de
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாநில உள்துறை செயலாளர் தீரஜ் குமாரும் காவல்துறை தலைவர் டிஜிபி வெங்கட்ராமனும் விளக்கம் அளித்துள்ளனர். - படம்: மின்னம்பலம்

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் ஆகியவற்றைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் சார்பாக வரும் மார்ச் 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது என்றும் அதை மீட்டெடுக்க இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே, நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்துத் தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது,” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்காமல், அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், மதுவை ஒழிப்போம் என உறுதிமொழி மட்டும் எடுப்பது வேடிக்கை,” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழகத்தைப் பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவை தமிழகத்தில் இருந்து துரத்தியடிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் தந்தை என முதல்வர் ஸ்டாலின் தன்னைக் கூறிக்கொள்வது வெட்கக்கேடு என்றும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடினால்தான் பெண்கள் அச்சமின்றி வாழ முடியும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், வளர்ச்சி அடைந்த மாநிலம் எனக் கூறப்படும் தமிழகத்தில்தான் வாழ்கிறோமா அல்லது சொகுசாக வாழ்வதற்காக பிறரின் நலன்களைக் காவுகொடுக்கும் கொடூரமான நிர்வாகத்தில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுவதாகக் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தன்னைத் தானே, ‘தமிழகத்தின் அப்பா’ என்று தம்பட்டம் அடிப்பது வெட்கக்கேடு என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தமிழக காவல்துறை அலட்சியமாகச் செயல்படுவதாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் குற்றஞ்சாட்டி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேர்மாறாக, தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாநில உள்துறை செயலாளர் தீரஜ் குமாரும் காவல்துறை தலைவர் டிஜிபி வெங்கட்ராமனும் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும், கடந்த சில நாள்களாவே உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.

“உண்மைக்கு மாறான தோற்றங்கள் காண்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கோவில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படுகின்றன.

“கடந்த 2021ஆம் ஆண்டு 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாயின. ஆனால் கடந்த 2025ஆம் ஆண்டு 401ஆகக் குறைந்தது. தற்போது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மக்கள் தாமாக முன்வந்து துணிச்சலோடு புகார் தருகிறார்கள்,” என்று இருவரும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்