தமிழக மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டைப் பறிக்கக்கூடாது: டி.ராஜா

2 mins read
08982ac0-42b1-4f6f-b84a-59b5c55458fc
மருத்துவக் கல்வியில் மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்திற்கான மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டை மத்திய அரசோ அல்லது உச்ச நீதிமன்றமோ பறித்துவிடக் கூடாது என்றும் அதைப் பாதுகாக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவக்கல்வியில் வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கெனத் தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்துகொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைக் கண்டித்தும், அத்தீர்ப்பை சரி செய்திடும் வகையில், உரிய அரசியல் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வலியுறுத்தியும், மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதைக் கைவிடக் கோரியும் சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் த. அறம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் எம். அஜய் முகர்ஜி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு ராஜா, “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் திணித்து வரும் அதன் கொள்கைகள், அரசியல் சாசன சட்டத்துக்குப் புறம்பாக உள்ளன. இந்தியா முழுவதிலும் ஓர் ஒற்றை மொழியைத் திணிக்க வேண்டும். அது இந்தியாகவோ சமஸ்கிருதமாகவோ இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் பெருமுயற்சி எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், மத்திய அரசு எல்லாத் தளங்களிலும், மாநில உரிமைகளைப் பறிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.

“இந்தப் பிரச்சினை அனைத்து மாநிலங்களுக்குமான பிரச்சினை. மருத்துவக் கல்வியைத் தனியார்மயமாக்குவது, மருத்துவக் கல்வியில் மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

“மருத்துவக் கல்வியில் தமிழகத்துக்கான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றமோ மத்திய அரசோ பறித்துவிடக்கூடாது. இது மாநில உரிமைகளைப் பறிப்பதாகும். இதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்,” என்று திரு ராஜா கூறினார்.

குறிப்புச் சொற்கள்