கோவை: மும்மொழிக் கொள்கையை ஏற்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அழுத்தம் தருவதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் மகேஸ் வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு தமிழக அரசுக்குத் தரவேண்டிய முதல் தவணைத் தொகையில் ரூ.573 கோடி வராமல் உள்ளது. 32,298 ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கான பணம் அது. அதனால், மாநில நிதியில் இருந்து கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம்,” என்று கூறினார்.
“27 வகையான பயன்பாடுகள் மத்திய அரசு நிதியைச் சார்ந்துள்ளது. பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு 60%, மாநில அரசு 40% என்ற நிதி அடிப்படையில் செயல்படுத்தி வரும் நிலையில், திடீரென அவற்றை நிறுத்துவோம் என்று மத்திய அரசு சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்றும் அவர் சொன்னார்.
மத்திய அரசின் 20 திட்டங்களில் 18ல் தமிழகம் முதன்மையாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
“அதனைப் பார்த்து உங்களிடமிருந்து மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்கொண்டு போகிறோம், உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்று சொல்வதுதான் நல்லது. அதனை விடுத்து, இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்க முடியும்’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை,” என்று திரு மகேஸ் கூறினார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் தருவதாகச் சாடிய அவர், அதுபோன்ற திட்டங்கள் இல்லாமலே நம்மால் நன்றாகச் செயல்பட முடிகிறது என்பதை நம்மிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருவதாக உள்ளது என்றும் சொன்னார்.