சிகாகோ: தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கான தாய் வீடாக தமிழகம் இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த உணர்வை, நம்பிக்கையை திமுக ஆட்சி ஏற்படுத்தி வருவதாக அமெரிக்காவின் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு, தமிழ்ச்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மாநில முதல்வராக, திமுக தலைவராக ஒரு நிகழ்ச்சியில் தாம் கலந்துகொண்டால் எத்தகைய சூழல் இருக்குமோ, அதைவிட அதிகமான உணர்வுப்பெருக்கோடு சிகாகோ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தமக்கு அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
“தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த நிறுவனங்களின் அதிபரைச் சந்தித்தாலும் இந்தியாவில் தமிழகம் எப்படியெல்லாம் முன்னிலை வகிக்கிறது.
“தமிழகத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என விளக்கி, தொழில் தொடங்க வாருங்கள் என அழைப்பு விடுப்பேன்.
“அதனால்தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெருமையை அடைந்திருக்கிறோம்.
“அரசுமுறைப் பயணமாக நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள தமிழர்களை, தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்திக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கும்.
“நாம் எல்லாம் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நாம் அனைவரும் உடன்பிறப்புகள் என்ற உறவை, பாசத்தை ஊட்டிய ஒரு தாய் இருக்கிறார். அவர்தான் தமிழ்த்தாய்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

