சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) திறக்கப்படவுள்ளன.
சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்மருந்தகத்தைத் திறந்துவைக்கவுள்ளார்.
பொதுவான மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், முதற்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று கடந்த 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழா உரையின்போது திரு ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில்முனைவர்கள் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளன. சென்னையில் 33, மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் மருந்தகத்திற்குத் தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றும் தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மருத்துவரணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன், “மருந்தகங்களுக்கு விண்ணப்பித்த 2,000 பேரில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மக்களின் பொருளியல் சுமையை வெகுவாகக் குறைக்க முதல்வர் மருந்தகம் உதவும்,” என்றார்.