சென்னை: தமிழ்நாட்டில் இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பிறகே பனைமரத்தை வெட்ட முடியும்.
இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்டுள்ளது.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக கடந்த 2021ஆம் ஆண்டு வேளாண்துறைக்கென தனி வரவுசெலவுத் திட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வேளாண்துறைக்கான பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வாசித்தார். அதில், பனைமரம் மற்றும் அதுசார்ந்த பொருள்களின் உற்பத்தி தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றன.
“தமிழகம் முழுவதும் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் 7.6 மில்லியன் பனைவிதைகளும் நூறாயிரம் பனங்கன்றுகளும் வழங்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்படும்,” என்று அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
மேலும், பனைமரத்தை வேரோடு அகற்ற வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லத்தை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பனைமரத்தை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பனைமரத்தை வேருடன் வெட்டி விற்பதையும் அதனைச் செங்கல் சூளைக்குப் பயன்படுத்துவதையும் தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அத்துடன், பனைமரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், இப்போது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தலைமையில் வட்டாரக் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.