தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சித்த மருத்துவ ஆராய்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது

1 mins read
dbb0ac21-5bfb-4927-af5d-bde90d0f0c1c
எட்டாவது தேசிய சித்த மருத்துவ தினம் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை (19.12.24) நடைபெற்றது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் இந்திய மருத்துவத் துறையும் ஓமியோபதி இயக்குநரகமும் இணைந்து, எட்டாவது தேசிய சித்த மருத்துவ தினத்தைச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை கொண்டாடின.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் காணொளிக் காட்சி வழியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நாட்டின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூலின் மூன்றாவது பாகம் (தமிழ்), எட்டாவது சித்த மருத்துவ தின விழா மலர் ஆகியவற்றை ஆயுஷ் துறைச் செயலர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜேஷ் கோட்டெச்சா, “சித்த மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. நாட்டில் கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்ட ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறை சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

“சிற்றூர்ப் பகுதிகளில் 90 விழுக்காட்டு மக்களும், நகர்ப்புறங்களில் 95 விழுக்காட்டு மக்களும் ஆயுஷ் மருத்துவத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். இவர்களில் 50 விழுக்காட்டினர் ஆயுஷ் மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்களைப் பெற 22 செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

“மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவ முறைகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. தேசிய ஆயுஷ் இயக்கத்தைத் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது,’’ என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்