நாலு‘மே’ நடுக்கம்

நாலு‘மே’ நடுக்கம்

3 mins read
9d47c4e1-9c83-4f67-908b-0b269e601d79
வயது வாரியாக கட்சிகளுக்கு இருக்கும் ஆதரவை வெளியிட்டுள்ளது, வாக்களிப்புக்குப் பிந்திய ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’வின் கருத்துக்கணிப்பு. - படம்: புதிய தலைமுறை

‘வெல்வது யார்?’ என்ற பெரிய கேள்விக்கு விடையளிக்கக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போதுவரை ‘திக்.. திக்’ மர்மம் நீடிக்கிறது.

களம் கண்ட நான்கு முனையும் மே நாலாம் தேதி முடிவை எண்ணி ஒருவிதமான நடுக்கத்தில் உள்ளன என்றே குறிப்பிடலாம்.

காரணம், இந்தத் தேர்தலில் அவை ஒவ்வொன்றும் வகுத்த சாதனை இலக்குகளுக்குச் சோதனை வரும் நிலை.

- திமுகவுக்கு, 1971க்குப் பிறகு ஆட்சியைத் தக்கவைத்து 55 ஆண்டு வரலாறு படைக்கும் இலக்கு.

- அதிமுகவுக்கு, ஜெயலலிதா இல்லாமல் தொடரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வராக்கும் இலக்குகள்.

- நாம் தமிழர் சீமானுக்கு 15 ஆண்டு தேர்தல் பயணத்தில் குறைந்தபட்சம் ஒரே ஒரு வெற்றி என்னும் இலக்கு.

- தவெகவுக்கு பழம்பெரும் திராவிடக் கட்சிகளிலிருந்து அரசியல் மாற்றம் என்னும் இலக்கு.

நாளை தொடங்கும் கத்திரி வெயிலையும் மிஞ்சக்கூடிய சூடான வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், இந்த நான்கில் ஏதேனும் ஒன்று கருகிவிடாமல் தப்பிக்கக்கூடும்.

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகளும் விஜய்யின் கடக ராசியைக் கணிக்கும் ஜோதிடமும் போட்டி போட்டுக்கொண்டு சமூக ஊடகங்களை நிரப்பி வருகின்றன.

எத்தனை கணிப்புகள் வெளியிடப்பட்டாலும், ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’வின் கணிப்பு புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்கான 118 இடங்களையும் தாண்டி 120 இடங்கள் வரை விஜய்யின் தவெக வெல்லும் என்கிறது அந்தக் கணிப்பு. 2024 மக்களவைத் தேர்தலைத் தவிர பெரும்பாலான ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’வின் (Exit Poll) கணிப்புகள் பலித்துள்ளன என்ற தகவல் இதரக் கட்சிகளின் கண்களில் பயத்தைக் காட்டியுள்ளன. ஆனாலும், பெரும்பாலான கணிப்புகள் தனது கூட்டணிக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டிருப்பதால் பயத்தை வெளிக்காட்டாமல் கனவில் மிதக்கிறது திமுக.

அதேநேரம், ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ கணிப்புக்குப் பின்னர் தேமுதிகவின் பிரேமலதாவும் விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்த கருத்துகள் அவர்கள் திமுகவை ஆதரிப்பார்களா என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளன. ‘திமுக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவோம்’ என்று எந்த உறுதியையும் தெரிவிக்காத அவர்களுக்கு தவெக தனது கதவுகளைத் திறக்கலாம். அதே கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்ற கையோடு தவெகவுக்குக் கைகுலுக்கத் தயாராகி வருகிறது. பாஜகவின் கடைக்கண் பார்வையும் தவெக பக்கம்தான்.

கணிப்புகள் என்பது வெற்றியின் போக்கை ஓரளவுக்குத் தீர்மானிக்கக்கூடியவைதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல. ஆனாலும், ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’வின் கருத்துகள் பேசுபொருளாகி உள்ளன. தவெகவுக்கு வயது வாரியாகவும் சமூகரீதியாகவும் படித்தவர்கள், படிக்காதவர்கள் மத்தியிலும் இருக்கும் ஆதரவைத் தொகுத்து விரிவான தரவுகளை வெளியிட்டுள்ளது அது. மதிமுகவும் தேமுதிகவும் நாதகவும் முதல் தேர்தலைச் சந்தித்தபோது ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அவை கணிக்கப்படவில்லை. ஆனால், தவெக ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ சொல்கிறது.

வாக்களித்தவர்களில் தொகுதிக்கு ஆயிரம் பேர் என்ற கணக்கில் 2.34 லட்சம் பேரிடம் ‘யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்டதில் 41 விழுக்காட்டினர் ‘தவெக’ என்று கூறியதாக, ஆய்வு நடத்திய ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். காலம் காலமாக அதிமுக, திமுகவுக்கு வாக்களித்த முதியவர்கள்கூட பேரன், பேத்தி பேச்சைக் கேட்டு இம்முறை ‘விசில்’ அடித்ததாக அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை ஒரு புதிய நட்சத்திரத் தலைவராக ரஜினி நிரப்புவார் என்றிருந்த எதிர்பார்ப்பு உதிர்ந்துவிட்ட நிலையில், தற்போது விஜய் அதனை நிரப்பியிருப்பதையே கணிப்புகள் உணர்த்துகின்றன.

இப்போது, விஜய் ‘கிங்’கா? ‘கிங் மேக்கரா?’ என்று கேட்பது ஒருபுறமிருக்கட்டும். அதிமுக, திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சிக்கான வெற்றிடத்தை வெற்றிக்கழகம் (தவெக) நிரப்பும் என்பதுதான் முடிவுகளுக்கு முன்பே தெரிந்திருக்கும் முடிவாக உள்ளது. கணிப்புகளை வெளியிட்ட அத்தனை அமைப்புகளும் அதிமுக, திமுகவுக்கு அடுத்த முக்கியத்துவத்தை தவெகவுக்குத் தந்துள்ளன.

ஆக, மூன்றாம் இடத்துக்கான அடித்தளம் உருவாகிறது. அது வெறும் அரசியல் அஸ்திவாரமா அல்லது ஆட்சிபீடத்தின் அடித்தளமா என்பதை முடிவுகளுக்குப் பிந்திய நிகழ்வுகள் உணர்த்தும். -திருநா

குறிப்புச் சொற்கள்