சென்னை: 2023-2024ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் சொகுசு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே ஆண்டில் 1,668 ஆடம்பர கார்கள் பதிவு செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் ஆவ்டி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஜாக்வார் லேண்ட்ரோவர் உள்ளிட்ட ஆடம்பர கார்களை வாங்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டை விட உயர்ந்துள்ளது.
மாநில போக்குவரத்து, பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, ரூ.30 லட்சத்திற்கும் அதிகம் மதிப்புடைய கார்களின் பதிவு 46 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2022-23 நிதியாண்டில் மொத்தம் 5,797 கார்கள் பதிவு செய்யப்பட்டன. ஒப்புநோக்க, 2023-24 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 8,475ஆக அதிகரித்துள்ளது.
முதல் ஐந்து மண்டலங்களின் பதிவு விவரங்களின் அடிப்படையில், சென்னைக்கு அடுத்து ஒரே ஆண்டில் கோவையில் 510 கார்களும் மதுரையில் 110 கார்களும் பதிவாகின. திருநெல்வேலியில் 95 கார்களும் திருச்சியில் 67 கார்களும் பதிவு செய்யப்பட்டன.
ஐந்து மண்டலங்களில் அதிகபட்சமாக 1,071 பிஎம்டபிள்யூ வகை கார்கள் பதிவு செய்யப்பட்டன. 1,016 கார்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் இரண்டாம் இடத்தில் வந்தது. 199 ஜாக்வார் லேண்ட்ரோவர் வகை கார்கள் பதிவு செய்யப்பட்டன.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், அவர்களுக்கு சொகுசு கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாக கார் விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.