சிறைக்கைதிகளிடம் சாதி விவரங்களைக் கேட்பது, சாதி அடிப்படையில் வேலை ஒதுக்குதல் போன்றவை இனி அனுமதிக்கப்படாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகச் சிறைகளில் கைதிகள் சாதி ரீதியாக அடையாளம் காணப்பட்டு, தனித்தனி இடங்களில் அடைக்கப்படுவதாகவும் சாதி ரீதியாகக் கைதிகளுக்குச் சிறையில் பணி ஒதுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. சிறைத்துறை இந்த அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு, சிறைத் துறை விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, புதிய கைதிகள் சிறையில் அடைக்கப்படும்போது, அவர்களின் சாதி தொடர்பான எந்தவொரு தகவலையும் சிறை அதிகாரிகள் பெறக் கூடாது, பதிவு செய்யக் கூடாது என்றும், அந்த விவரங்கள் எந்தப் பதிவேட்டிலும் இடம்பெறக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் சாதி அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
சிறைப் பணிகள், குறிப்பாகக் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் சாதி அடிப்படையில் ஒதுக்கக் கூடாது என்றும் அந்தப் பணிகள் இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகச் சிறைத்துறை விதிமுறை திருத்தங்களை உடனடியாக அமல்படுத்தும்படி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.