சென்னை: தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இடையே வெளிநாடு சென்று உயர்கல்வி பயிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்கான உதவித்தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பங்கள் அதிகரித்து வருகின்றன.
ஆண்டுதோறும் ரூ.8 லட்சத்திற்கும் கீழ் வருமானம் உள்ள குடும்பத்தினருக்கு ரூ.36 லட்சமும், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கும் கீழ் இருந்தால் ரூ.24 லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அம்மாணவர்கள் வேளாண்மை, மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் என எந்தத் துறையிலும் உயர்கல்வி பெற முடியும்.
விருப்பம் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சிப் படிப்பையும் மேற்கொள்ள முடியும்.
கடந்த 2023ஆம் ஆண்டு, அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைப் பயன்படுத்தி வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பின்னர் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
எனவே, ஆதிதிராவிடர் நலத்துறையும் தனியார் வங்கியும் இணைந்து இதுகுறித்து கல்லூரி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.
கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் 171 பேர் உதவித்தொகையைப் பெற்று வெளிநாடு சென்றுள்ளனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
மதுரை மண்டலத்தில் 42 பேர், டெல்டா மாவட்டங்களில் 40 பேர், வடமாவட்டங்களில் 40 பேர் எனப் பல மாணவர்கள் அரசிடம் விண்ணப்பம் அளித்த கையோடு, அயல்நாடு உயர்கல்விக்குத் தயாராகி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தாண்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 400ஐக் கடக்கக்கூடும் என்றும் தாங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் மோசஸ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில், குறிப்பாக, கனடா, ஐரோப்பா நாடுகளில் உயர்கல்வி பயிலச் சென்றவர்கள் ஆங்கில மொழித்திறன் தேர்வு எழுதுவது கட்டாயமாக உள்ளது.
எனவே, மொழித்திறன் தேர்வுக்கான பயிற்சியை ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


