தமிழ்நாடு இனி சிங்கப் பாதையில் செல்லும்: ஸ்டாலின்

2 mins read
cf6f70ae-5777-4aa4-a2a6-00ae7b9d251f
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி இருக்கும் என்றும் அரசு விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் ரூ.408 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல்வேறு அவலங்களை தமிழகம் சந்தித்ததாகக் கூறி பல சம்பவங்களைப் பட்டியலிட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடந்த விடியலுக்கான மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான கொள்கையை அறிவித்ததை திரு ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

“வாழ்க்கைத் தரம், கட்டமைப்பு, கல்வி, தண்ணீர், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என்று ஏழு வாக்குறுதிகளை அளித்தோம். இதில் பெரும்பாலானவற்றை நான்கு ஆண்டுகளில் எட்டியுள்ளோம். பொருளியலைப் பொறுத்தவரை 9.69% வளர்ச்சியானது, இதுவரை தமிழ்நாடு பார்த்திடாத வளர்ச்சி. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

“வேளாண்மையை பொறுத்தவரை தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறோம். கல்வி என்றால் புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் காரணமாக உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேசிய சராசரியை விடவும் தமிழ்நாடு 2 மடங்கு அதிகமாக உள்ளது. தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில் இருக்கிறது.

“மருத்துவத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ஐநா விருதை பெற்றுள்ளோம். இவற்றையெல்லாம் விட சமூக நீதி அரசை உருவாக்கி இருக்கிறோம்,” என்றார் ஸ்டாலின்.

இத்தகைய சாதனைகளை திமுகவின் அரசியல் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், முந்திய ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தன என்பதை தமிழக மக்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றார்.

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் விவகாரம் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இப்படியான இருண்ட ஆட்சியில் இருந்து நான்கு ஆண்டுகளில் திமுக எப்படியான மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதுவெறும் தொடக்கம்தான்,” என்றார் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்