சென்னை: தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்து வருவதைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) மிகப்பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தெலுங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளதாக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “மாநில அரசின் ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற விழா சென்னையில் நடக்க உள்ளது.
“இதில், நான் முதல்வன், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகள் பங்கேற்று தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
“நான் முதல்வன்’ திட்டம் மூலமாக 14.60 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். பல்வேறு பிரிவுகளின்கீழ் பயிற்சி பெற்று 41 லட்சம் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறாா்கள்.
“முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக 37 ஆயிரத்து 416 பள்ளிகளைச் சோ்ந்த 20.59 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.
“புதுமைப் பெண்’ திட்டத்தில் 5.29 லட்சம் கல்லூரி மாணவியரும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் 3.92 லட்சம் மாணவா்களும் மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர்.
“கல்வித் துறையைப் போலவே விளையாட்டுத் துறைக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், விளையாட்டு உள்கட்டமைப்புக்காக மட்டும் ரூ.548 கோடி செலவிடப்பட்டுள்ளது,” என்று அமுதா கூறினார்.