வேலூர்: மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் மொத்த வளர்ச்சியில், தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் 10 விழுக்காடு எனக் குறிப்பிட்டார்.
“கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழ் நாட்டை, வரலாறு காணாத வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளோம்.
“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு 9.21 விழுக்காடு. தலைநகரை மட்டும் வளர்க்கவில்லை, அனைத்து நகரங்களையும் வளர்த்துள்ளோம்.
“திருப்பத்தூரில் 14 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 211 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். நாட்றம்பள்ளியில் தோல் அல்லாத காலணி பூங்கா அமைக்கப்பட உள்ளது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால்கூட தமிழகத்தின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை என்றார் அவர்.
பொருளியல் வளர்ச்சியில் 9.69 விழுக்காடு பங்களித்து, மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக மத்திய அரசே கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நாட்டின் மொத்த வளர்ச்சியில், தமிழகத்தின் பங்களிப்பு ஏறக்குறைய 10% ஆகும். தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக உருவாகி வருகிறது தமிழ்நாடு.
தொடர்புடைய செய்திகள்
“பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்று உள்ளது. ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்சம் தருகிறார்கள். இந்தத் தொகையில் வீடு கட்ட முடியுமா? அதிலும், ரூ.72,000ஐ மட்டும்தான் மத்திய அரசு தருகிறது, மீதமுள்ள ரூ.1.62 லட்சத்தை மாநில அரசுதான் கொடுக்கிறது.
“திட்டத்தின் பெயர்தான் அவர்களுடையது. நிதி நம்முடையது. அதனால்தான் ஏற்கெனவே நான் ஒரு வசனத்தைச் சொன்னேன்.
“மாப்பிள்ளை அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது,” என்றார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த பாஜகவினர் தொடர்ந்து முயற்சி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், மக்களைப் பற்றி கவலைப்படாமல் மதத்தை பற்றி மட்டுமே கவலைப்படுவதாகச் சாடினார்.