கோடைக் காலத்தில் தமிழக மின்தேவை 22,150 மெகாவாட்டாக அதிகரிக்கும் எனக் கணிப்பு

1 mins read
37870eb4-93e3-42e9-ae3b-a146808734b1
தமிழகத்தில் தற்போது, 2.5 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகளும் 40 லட்சம் வணிகப் பயன்பாட்டு மின் இணைப்புகளும் உள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் அன்றாட மின்தேவையானது மிக விரைவில் 22 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் தமிழ்நாட்டின் மின் தேவையானது திடீரென வெகுவாக அதிகரிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதே இதற்குக் காரணம்.

அந்த வகையில் எதிர்வரும் கோடைக்காலத்திலும் அன்றாட மின்தேவையானது 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஏறக்குறைய 10 விழுக்காடு அதிகமாகும்.

தமிழகத்தில் தற்போது, 2.5 கோடி வீடுகளுக்கான மின்னிணைப்புகளும் 40 லட்சம் வணிகப் பயன்பாட்டு மின்னிணைப்புகளும் உள்ளன.

மேலும், மாநிலம் முழுவதும் 25 லட்சம் விவசாய மின்னிணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள்தொகை, புதுப்புது தொழிற்சாலைகள் காரணமாக மின்தேவை மேலும் அதிகரித்து வருகிறது.

அன்றாட மின்தேவையானது தற்போது 15 ஆயிரம் மெகாவாட்டாக மட்டுமே உள்ளது என்றாலும், வரும் நாள்களில் இது மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக மின்வாரியம் 4 ஆயிரம் மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது. எஞ்சியவை மத்திய தொகுப்பில் இருந்தும் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் பெறப்படுகிறது.

நடப்பாண்டில், ஆக அதிகமாக 22,150 மெகாவாட் அளவுக்கு மின்தேவை அதிகரிக்கக்கூடும் என தென்னிந்திய மின்சாரக் குழு கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்