சென்னை: கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 19,000 மெகாவாட்டை நெருங்கியுள்ளது.
தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) மாநிலத்தின் உச்ச மின்தேவை 18,955 மெகாவாட்டாகப் பதிவானது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் உச்ச மின்தேவை 15,070 மெகாவாட்டாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரவிருக்கும் மாதங்களில் வணிகச் செயல்பாடுகள் அதிகரிப்பு, கோடை வெப்பம் உயர்வு, சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் ஆகியவை காரணமாக மின்தேவை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்துத் தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இவ்வாண்டு கோடைக் காலத்தில் தமிழ்நாட்டின் மின்தேவை 23,000 மெகாவாட்டை எட்டக்கூடும் எனத் தெற்கு மண்டல மின்குழுமம் கணித்துள்ளது,” என்றார்.
“தற்போது மாநில அரசுக்குச் சொந்தமான மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து 100 மில்லியன் யூனிட்டுகளும், மத்திய அரசின் பங்காக 100 மில்லியன் யூனிட்டுகளும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. சூரிய ஒளிமூலம் நண்பகல் வேளைகளில் கிட்டத்தட்ட 40 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, கோடைக்கால மின்தேவையை எங்களால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று அந்த அதிகாரி கூறினார்.
மேலும், குறுகிய கால ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தனியார் நிறுவனங்களிடமிருந்து 2,000 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், அரசாங்கத்தின் அனல் மின்னிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்தது.
சென்ற ஆண்டு கோடைக் காலத்தின்போது பல இடங்களில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் அடிக்கடி மின் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதாகப் பயனீட்டாளர்கள் புகாரளித்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து விளக்கமளித்த மற்றோர் அதிகாரி, கோடையில் குளிர்பதனப் பெட்டிகள் உள்ளிட்ட மின்கருவிகள் அதிக நேரம் பயன்படுத்தப்படுவதைச் சுட்டினார்.
“மின்தேவை உச்சத்தில் இருக்கும்போது மின்னழுத்தச் சிக்கல்களை முற்றிலும் தவிர்க்க முடியாது. இருப்பினும், பல பகுதிகளில் மின்மாற்றிகளை நவீனப்படுத்தியுள்ளோம்,” என்றார் அவர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், இக்காலகட்டத்தில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதிசெய்ய அதிகாரிகள் முயற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

