குவைத்தில் சித்திரவதைக்கு ஆளான தமிழகப் பெண் மீட்பு

குவைத்தில் சித்திரவதைக்கு ஆளான தமிழகப் பெண் மீட்பு

1 mins read
4d7812d1-05d2-4082-8c5b-4d22f65cfa63
தலையில் துணியைப் போர்த்தியபடி, கையெடுத்துக் கும்பிட்டவாறு தாம் இந்தியாவிற்குத் திரும்பி வர உதவுமாறு மிகவும் குறுகலான ஓர் அறையிலிருந்து வனிதா பேசும் காணொளி வெளியாகியுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

குவைத்: குவைத்தில் அடைத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளான தமிழகப் பெண் வனிதா மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இவர், குடும்ப வறுமை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டுப் பணிப்பெண் வேலைக்காகக் குவைத் சென்றார்.

அங்குத் தான் வேலை பார்க்கும் வீட்டில் சிறிய அறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்யப்படுவதாகவும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் வனிதா கண்ணீருடன் காணொளி வெளியிட்டார்.

அத்துடன், இரண்டு மாதங்களாகச் சம்பளமும் வழங்கப்படவில்லை என்று கூறிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும் தன்னை மீட்கும்படி உருக்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்காணொளி பரவியதை அடுத்து, வனிதாவின் தாய் வெண்ணிலா அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறையினர் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே இக்காணொளி குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, தூதரக அதிகாரிகள் வனிதாவைக் கண்டுபிடித்து மீட்டனர்.

தற்போது இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பாக இருக்கும் வனிதா, தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துப் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இப்போது நான் இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன்; எனக்கு நல்ல உடையும் உணவும் கிடைக்கிறது,” எனக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்