திமுக மிரட்டியதால் உலக நாயகன் பட்டத்தை கமல் கைவிட்டார் என தமிழிசை கிண்டல்

1 mins read
586ed9cd-7d89-4465-b430-66bf1f54e5fd
தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி பதிலளித்துள்ளது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: தி.மு.க. மிரட்டலால்தான் கமல் தனது பட்டத்தை துறந்தார் என்று கூறிய பாரதிய ஜனதா தலைவர் தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

அண்மையில் கமல்ஹாசன் தன்னை ‘உலக நாயகன்’ என்று அழைக்க வேண்டாம் என்றும் ‘கமல்’ அல்லது ‘கமல்ஹாசன்’ என்றே அழைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் கமல்ஹாசன் தன் பட்டத்தை துறந்துள்ளார் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்து இருந்தார்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வெள்ளிக்கிழமை அன்று மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“அதில், பா.ஜ.,வில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை கமல் தனக்கு அளிக்கப்பட்ட உலகநாயகன் என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். தேர்தலில் நின்று எம்.பி., ஆகி மத்திய அமைச்சராகி விடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை; தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர்; கமல் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். கமல், உலக நாயகன் பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு.

“முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசல்ல என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். அது, சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் தமிழிசைக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்