த.வெ.க. தலைவர் விஜய் விருந்து: குடும்பத்துடன் அழைத்து வரப்பட்ட விவசாயிகள்

1 mins read
d7753e1b-9b6a-4b18-95f6-af498564415a
மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விருந்து அளிக்கிறார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளையும் கூறினார்.

இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்குப் பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாயப் பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் தயார் செய்து கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அண்மையில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக பசுமாடு, கன்றுக்குட்டியை தவெக நிர்வாகிகள் வழங்கி குதூகலப்படுத்தினர்.

இந்நிலையில், தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சித் தலைவர் விஜய், சனிக்கிழமை நவம்பர் 23ஆம் தேதி விருந்து அளித்தார்.

முன்னதாக இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வி.சாலை நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தங்களது குடும்பத்துடன் இந்த விருந்தில் கலந்து கொள்ள பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இதற்கான பேருந்து ஏற்பாடுகளையும் த.வெ.க. கட்சியினர் செய்திருந்தனர்.

இதனிடையே தவெக தலைவர் விஜய் பனையூருக்கு வரவுள்ள நிலையில், இரும்புத் தடுப்புகள் கொண்டுவரப்பட்டு, காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்