சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் உயரதிகாரிகளைக் குறிவைத்து சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பத்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
மணப்பாக்கம் சிஆர் புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உட்பட சில அதிகாரிகளின் வீடுகளில் இந்தச் சோதனை பலமணி நேரம் நீடித்தது.
சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்என்ஜே என்ற தனியார் நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஆகாஷ் பாஸ்கரன் இல்ல நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி உள்ளிட்ட படங்களை ஆகாஷ் தயாரித்து வருகிறார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் சோதனை மேற்கொண்டது. அதன் முடிவில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கையும் வெளியிட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்தும் உத்தரவிட்டது.
இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், மே 16ஆம் தேதியான நேற்று அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அமலாக்கத்துறை.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் இரண்டு நாள்களுக்கு சோதனை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் திமுக தலைமைக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்றும் கூறியுள்ளனர்.