சென்னை: வரி ஏய்ப்பு தொடர்பாக, சென்னையின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இம்முறை தொழிலதிபர்கள், தங்க நகை மொத்த வியாபாரி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அண்மைய சில மாதங்களாகத் தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் பல்வேறு காரணங்களுக்காக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம்கூட மருத்துவர் இந்திரா, இரு தொழிலதிபர்களின் வீடுகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் துணையுடன் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ராமகிருஷ்ணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இச்சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வெளி மாநிலத்தில் வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கிய சில பிரமுகர்களுடன் தொடர்புள்ள சிலரைக் குறிவைத்தே தமிழகத்தில் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

