மதுரை: வரி முறைகேடு தொடர்பாக மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்த அவரை, குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்ததை ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் நடந்துள்ள முறைகேடுகள் மூலம் ரூ.150 கோடி அளவுக்கு நடந்துள்ள மோசடி அண்மையில் அம்பலமானது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கு, அவற்றின் அமைப்புக்கு ஏற்ப சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், பல கட்டடங்களுக்கு வரி குறைக்கப்பட்டு, முறைகேடாக சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு மாநகராட்சி ஆணையாளராக இருந்த தினேஷ்குமார் இம்முறைகேடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். ஆனாலும், முறைகேடுகள் நீடித்தன. இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்டோருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் கைதாகி உள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்வசந்த் திமுகவைச் சேர்ந்தவர். ஊழல் வழக்கில் அவர் கைதானதை அடுத்து, திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.