இன்னும் இரண்டு நாள்களில் தீபாவளி. தமிழக மக்கள் பட்டாசுகளை வெடித்து, வான வேடிக்கைகளை நிகழ்த்தி மகிழக் காத்திருக்கிறார்கள்.
‘கந்தக பூமி’ என்று குறிப்பிடப்படும் சிவகாசியில் பட்டாசுகள் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெளிமாநிலத்தவர்களும் பட்டாசுகள் வாங்க குவிந்துள்ளனர்.
இந்த ஆண்டும் ‘பீட்சா’, ‘வேல்’, ‘கிட்டார்’, ‘சிலிண்டர்’, ‘ஐபிஎல்’ கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள ‘மும்பை இந்தியன்ஸ்’, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிகளின் பெயர்கள் என 30க்கும் மேற்பட்ட பல புதுரகப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்தியாவின் பட்டாசுத் தேவையில் 80 விழுக்காட்டை சிவகாசிதான் பூர்த்தி செய்கிறது.
தற்போது 1,085 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. 2,963 சில்லறைப் பட்டாசு விற்பனைக் கடைகளும் 921 பட்டாசு சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன.
தமிழகப் பட்டாசு ஆலைகளில் உள்ள நேரடி ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை இருநூறாயிரத்துக்கும் அதிகம். மேலும், பட்டாசு உற்பத்தியை நம்பியுள்ள அச்சுத்தொழில், காகித ஆலைகள், சுமைதூக்கும் பணியாளர்கள், விற்பனையாளர்கள் என மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
நூற்றாண்டைக் கடந்த பட்டாசுத் தொழில்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் எப்போதுமே விவசாயம் பெரிய அளவில் செழித்ததில்லை.
வானம் பார்த்த பூமியாக இருந்த இந்த இடம் பட்டாசுத் தொழிலுக்கு ஏற்றது என்பதை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார், சண்முக நாடார் உடனடியாக கோல்கத்தாவுக்குச் சென்றனர். அங்கு தீப்பெட்டி, பட்டாசுத் தயாரிப்புத் தொழிலை கற்றனர்.
தொழில் நுணுக்கங்களைப் புரிந்துகொண்ட இருவரும் சூட்டோடு சூடாக 1923ஆம் ஆண்டு சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளைத் தொடங்கினர்.
இந்தியாவில் திருமணம், காதுகுத்து விழா, திருவிழாக்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள் என ஆண்டு முழுவதும் ஏதேனும் ஒரு காரணத்துக்காகப் பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
சிறிய முதலீட்டுடன் தொடங்கப்பட்ட பட்டாசுத் தொழில் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது சிவகாசியில் 250 ரகங்களில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4,000 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. இதனால் ‘இந்தியாவின் குட்டி ஜப்பான்’ என சிவகாசி குறிப்பிடப்படுகிறது.
தேய்ந்துபோகும் வேதனைக் குரல்
தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 30% பெண் ஊழியர்கள் உள்ளனர். இது தேசிய சராசரியைவிட அதிகமாகும்.
ஆனால் மிகப்பெரிய சந்தை, லாபத்தைக் கொடுக்கும் இந்தத் தொழிலை நம்பியுள்ள பெரும்பாலான ஏழை, எளிய ஊழியர்களின் நிலை மிக சோகமானது.
“கொண்டாட்ட வேளையில் ஒலிக்கும் பட்டாசுச் சத்தமும் வாண வேடிக்கைகளால் ஏற்படக்கூடிய வர்ண ஜாலங்களையும் பார்த்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கிறோம். திரும்பிய பக்கம் எல்லாம் புன்னகை தவழும் மனித முகங்கள். ஆனால், இந்த ஆர்ப்பரிக்கும் சத்தத்துக்கு முன்னர் பட்டாசுத் தொழிலாளர்களின் வேதனைக் குரல் தேய்ந்து போகிறது.
உயிரைப் பணயம் வைத்து...
வளமான - வலிமையான இந்தியா என்று முழக்கங்கள் பெரிதாக ஒலிக்கும் இவ்வேளையில், பட்டாசு ஆலை ஊழியர்களின் அன்றாடக் கூலி இன்னும் ஐநூறு ரூபாயைக்கூட தாண்டவில்லை. இத்தனைக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேலை இது.
காலை வீட்டிலிருந்து மதிய உணவுடன், குழந்தைகளை முத்தமிட்டுக் கிளம்பிச் செல்லும் பட்டாசு ஊழியர் மாலையில் வீடு திரும்புவது விதியின் கையில்தான் உள்ளது.
பல்வேறு வேதிப் பொருள்களின் கலவையைக் கொண்டு பட்டாசுகளை உருவாக்கும்போது, வெடிப்பொருள்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்தால்கூட பெரும் ஆபத்து ஏற்படும். சிறு நெருப்புப் பொறி ஏற்பட்டாலும், அடுத்த நிமிடம் ஒட்டுமொத்த ஆலையும் இடிந்து தரைமட்டமாகிவிடும். உள்ளே இருந்தவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சிவகாசி பட்டாசு ஆலை விபத்துகளில் 161 பேர் மாண்டுவிட்டனர். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி மாண்டோர் தவிர படுகாயமடைந்து, கை,கால்களை இழந்து நூற்றுக்கணக்கானோர் தவிக்கின்றனர்.
பல ஆண்டுகள் பட்டாசு ஆலையில் பணியாற்றியவர்களுக்கு தோல் பிரச்சினைகள், நுரையீரல் பாதிப்பு என பின்னாள்களில் பல உபாதைகள் ஏற்படுகின்றன.
ஆலைகளில் பணியாற்றுவோரில் ஏறக்குறைய 77 விழுக்காட்டினர் பெண்கள்தான் என்றும் பட்டாசுகளில் ரசாயனம் நிரப்புவது, வரிசையாக அடுக்குவது, பேக்கிங், ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற ஆபத்தான வேலைகளில் 77% பெண்களே ஈடுபடுகின்றனர் என்றும் இந்திய தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிரைக் கொடுத்து வேலை பார்க்கும் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தித்தர வேண்டும் என்பதே இவர்களின் முதன்மைக் கோரிக்கை. ஆனால், இது செவிடன் காதில் ஊதிய சங்கு என்ற கதையாகவே உள்ளது.
எனினும், இது குறித்து மேலும் கவலைப்படவோ, போராட்டம் நடத்தவோ யாருக்கும் நேரமில்லை. ஒருநாள் வேலைக்குப் போகவில்லை என்றாலும் வீட்டில் அடுப்பு எரியாது.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆலை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதுதான் விபத்துகளுக்குக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.