சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இண்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொண்ட 68 பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
சென்னையில் இருந்து திருச்சி வரை அன்றாடம் விமானச் சேவை அளித்து வருகிறது இண்டிகோ நிறுவனம்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி, புதன்கிழமை காலை 5.45 மணியளவில் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானம் தயாராக இருந்தது. அதில் 68 பயணிகள், 5 பணியாளர்கள் உட்பட 73 பேர் இருந்தனர்.
குறித்த நேரத்தில் விமானம் புறப்பட்ட போதும், ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த விமானி, ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார். அதன் பின்னர் விமானப் பொறியாளர்கள் சிக்கலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்கு முன்பு, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய ஒரு மணிநேரமானது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
ஒரு மணிநேர தாமதத்துக்குப் பின்னர் இண்டிகோ விமானம், ஏறக்குறைய காலை 6.45 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
அண்மைக் காலமாக சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் பல விமானங்கள் ரத்தாவதும் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதே போல் வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதும் திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்ந்து வருகிறது.