சென்னை: தமிழகத்தில் கடந்த ஆறு மாதக்கால ஆட்சியில், ஆக்கிரமிப்பில் இருந்த 148.91 கோடி ரூபாய் மதிப்புள்ள 163.40 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு, உரிய கோவில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள், அசையாச் சொத்துகளைப் பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் துறைரீதியான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவின் கீழ், மண்டல இணை ஆணையர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் இதுவரை 23,815 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அறநிலையத்துறை அமைச்சரது அறிவுறுத்தலின்பேரில், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்த 163.40 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 148.91 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், கோவில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துகளில் இருந்து நீண்டகாலமாக நிலுவையில் இருந்த 213 கோடி ரூபாய் வாடகை, குத்தகைத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. வருவாய் ஆவணங்களைச் சரிசெய்யும் பணியின் ஒரு பகுதியாக, 34.82 ஏக்கர் நிலங்கள் 15 கோவில்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் வாடகை, நிலுவைத் தொகை குறித்த விபரங்களை வாடகைதாரர்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் அனுப்பும் நவீன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
