திருச்சி: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் எடுத்துள்ள ஒப்பந்தப் புள்ளிகள், அதனால் முறைகேடாக அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
‘திமுக கோப்புகள் - 3’ (திமுக ஃபைல்ஸ்) என்ற பெயரில் வெளியிடப்படும் கோப்புகளில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கான ஒப்பந்தப் புள்ளி விவகாரங்கள் உரிய புகைப்படங்களுடன் வெளியிடப்படும் எனவும் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
‘டங்ஸ்டன்’ சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை டிசம்பர் 12ஆம் தேதி சந்திக்க உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இச்சந்திப்புக்குப் பின்னர் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
‘டங்ஸ்டன்’ விவகாரத்தில் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் நாடகமாடியுள்ளதாக விமர்சித்த அண்ணாமலை, முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
“டாஸ்மாக் பிரச்சினைக்காகவும் முதல்வர் பதவி விலக வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் ரவுடிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது. காவல்துறையின் கைகளில் கட்டப்பட்டுள்ள கயிற்றை முதல்வர் அவிழ்த்துவிட வேண்டும்.
“மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் தமிழக அரசு வேறு பெயர்களில் அவற்றை அமல்படுத்துகிறது. இறுதியில் மத்திய அரசிடம்தான் நிதி கேட்டு வருவார்கள். அவ்வாறு நிதி கிடைக்கவில்லை என்றால் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள்,” என்றார் அண்ணாமலை.

