தென்பெண்ணை நீர் பங்கீட்டு பிரச்சினை: நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தென்பெண்ணை நீர் பங்கீட்டு பிரச்சினை: நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 mins read
507b4ca5-53b9-43cb-864f-5b1c184095ea
கர்நாடகத்துடன் தென்பெண்ணை நீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தை அமைக்கவும் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்கும் வரை, மார்க்கண்டேயா நதியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்திருந்தது. - படம்: இந்து தமிழ்

புதுடெல்லி: தென்பெண்ணை நீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு, நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்துடன் தென்பெண்ணை நீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தை அமைக்கவும் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்கும் வரை, மார்க்கண்டேயா நதியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி. அஞ்சரியா அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி விசாரித்தது. இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட சமரசக் குழுவால் மூன்று முறை ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. எனவே, தென்பெண்ணை நீர் பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றத்தை அமைப்பதே தீர்வாகும் என தமிழகத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசின் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து, மத்திய அரசுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய நீர்வளத் துறையின் சார்பில் ஏற்கெனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறுகிறது. பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறது’ என வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘‘தென்பெண்ணை நீர்பங்கீட்டுப் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைத்து, அது குறித்த ஆணை அரசிதழில் வெளியிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்