காரைக்குடி: திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவிதமான பிணக்கும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு கட்சியினரும் விழிப்புடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“காங்கிரஸ் கட்சி இண்டியா கூட்டணியில்தான் உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்த காங்கிரஸ் தலைமை ஐந்து பேரை நியமித்துள்ளது.
“அக்குழுவினர் முதல்வரையும் மற்ற தலைவர்களையும் ஒருமுறை சந்தித்துள்ளனர். திமுகவும் ஒரு குழுவை அமைத்த பிறகு பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என முதல்வர் கூறியுள்ளார்.
“இந்த தேர்தலில் இண்டியா கூட்டணிதான் வெல்லும். எங்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை,” என்றார் பா.சிதம்பரம்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை திமுக தலைவரும் காங்கிரஸ் தலைவரும் முடிவு செய்வர் என்றார் அவர்.
“ஆட்சியில் பங்கு, தொகுதிப் பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேசி எடுக்கப்படும் முடிவே இறுதியானது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை,” என்று பா.சிதம்பரம் தெரிவித்தார்.
பொருளியல் வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

