மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றியதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தீபம் ஏற்றுவது தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு காணொளி மூலம் முன்னிலையான அரசுத் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், முதலில் தீபத்தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ஒரே கட்டடம் தர்கா மட்டுமே என்று கடந்த 1920ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய திரு பி.எஸ். ராமன், திருப்பரங்குன்றம் மலையை முழுமையாக ஆய்வு செய்த பிறகே நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆய்வின்போதே அங்கே தூண் இருந்திருந்தால் தனி நீதிபதி தனது உத்தரவில் அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற முடியுமா என்பதுதான் அரசுத் தரப்பின் கேள்வி என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்ட திரு பி.எஸ். ராமன், தர்கா அருகே உள்ளது தீபம் ஏற்றும் தூணே அல்ல என்பதுதான் தங்கள் வாதம் என்றார்.
“தீபத்தூண் பிரச்சினை எழுவதற்கு முன்பே நெல்லை, மதுரை மாவட்டங்களில் உள்ள கல் தூண்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நில அளவைத் துறை, வருவாய்த் துறை ஆய்வு செய்ததில் இது போன்றே பல்வேறு தூண்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
“கல் தூண்களின் முக்கியத்துவத்தைச் சரிபார்க்கும் நோக்கத்துடன் நில அளவைத்துறை ஆய்வு செய்தது. நெல்லித்தோப்பு அருகே உள்ள படிக்கட்டுகள் காசி விஸ்வநாதர் கோயிலுக்குத்தான் செல்கின்றன என்ற கூற்றை ஏற்க முடியாது.
“தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, எவ்வித ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்று தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மேலும் வாதிட்டார்.

