சென்னை: மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஓராண்டாக அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்ததாகவும் கட்சி தொடங்கி ஏழு ஆண்டுகள் முடிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் அதிமுகவுடனும் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“பன்னீர்செல்வத்தை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க டெல்லியில் உள்ள தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தேன். அந்த வகையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ் அவரை அழைத்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பேசி, ஓபிஎஸ் கூட்டணிக்குள் வந்தால் மகிழ்ச்சிதான்,” என்றார் தினகரன்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. எனவே, அதிமுகவுடன் நேரடியாகக் கூட்டணி வைக்காவிட்டாலும், பாஜகவின் தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் அமமுக இதே கூட்டணியில் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.