சென்னை: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களைச் சென்றடையாமல் போனதற்கு திமுக அரசுதான் காரணம் என அவர் குற்றஞ்சாட்டினார்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், திமுக அரசு முறையான கணக்கெடுப்புகளை நடத்தத் தவறியதால்தான் மக்கள் பலனடையவில்லை என்றார்.
தமிழகத்தில் போதைப்பொருள், கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய இரட்டை ‘இன்ஜின்’ அரசு தமிழக வளர்ச்சியை உறுதி செய்யும் என்றார்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும் என்றார்.
மேலும், திமுக கூட்டணிபோல் தங்கள் கூட்டணியில் எந்தவித மோதலும் இல்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பே இல்லை என்றும் திரு பியூஷ் கோயல் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

