எஸ்ஐஆரில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது - தவெக

2 mins read
92e0983c-4790-4096-a749-965d358e8b32
எஸ்ஐஆர் என்னும் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (1.11.2025) தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் (எஸ்ஐஆர்) அரசியல் தலையீடு இருக்கக் கூடாது தவெக கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். அவருடன் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்டச் செயலாளர்கள் அப்புனு, பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, வாக்காளர் பட்டியலைத் திருத்துகிறோம் என்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்படுகின்றன என்று மக்கள் புகார் கூறுகின்றனர். அதேவேளையில், பட்டியலில் போலி வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளைப்புறம் வழியாக வெற்றி பெறப் பார்க்கின்றனர் ஆட்சியாளர்கள். இது ஆளும் கட்சிக்கு சார்பான அரசியல் சூழ்ச்சி என்று கூறினார்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இங்கு ஆளும்கட்சியினர்தான் தீர்மானிக்கின்றனர். எனவே, இந்தப் போக்கு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக வீடுவீடாகச் செல்லும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை (பிஎல்ஓ) மிரட்டி அவர்களுக்குச் சாதகமாக வாக்காளர்களை நீக்குவதையும் சேர்ப்பதையும் பாஜகவும் திமுகவும் கைவிட வேண்டும்.

தவெக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கருத்துகளுக்கும் தேர்தல் ஆணையம் செவிமடுத்து, நியாயமான முறையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், தவெகவின் போராட்டம் ஓயாது என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ‘எஸ்ஐஆர்’-ஐ எதிர்ப்பதாக திமுக கூறுகிறது. அப்படியென்றால், சட்டப்பேரவையில் ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை?

இதுகுறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியிருக்க வேண்டும். அப்படி நடத்தாமல் திமுக சார்பில் நடத்தியது ஏன்?

இதனால்தான் திமுகவும், பாஜகவும் மறைமுக கூட்டணி என விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். எஸ்ஐஆரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என இங்கு யாரும் கூறவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு செய்திருக்கலாம் என்று தான் கூறுகிறோம். உண்மையான, வெளிப்படையான ஒரு தேர்தல் நடந்தால், தவெக கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

எஸ்ஐஆர் பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை (பிஎல்ஓ) பணி செய்ய விடாமல் ஓர் இடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, திமுகவினர்தான் வீடு வீடாக செல்கின்றனர். இதுபோல, எஸ்ஐஆர் பணியில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று தவெக தலைவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்