அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: ஸ்டாலின்

2 mins read
04cf02c9-c055-47c8-967d-0adb995507ca
சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: தினத் தந்தி

சென்னை: அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக ஜிகேஎம் காலனியில் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார்.

பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தில் புதியதாக அமைய உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தையும் திரு ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “கொளத்தூர் என் சொந்த தொகுதி. நினைத்த நேரத்தில் இங்கு வருவேன்,” என்றார்.

‘டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டதே வெள்ளை அறிக்கை’

அப்போது திரு ஸ்டாலினின் அண்மைய அமெரிக்கப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாகவே தெரியும். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர். பி.ராஜா விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கைதான்,” என்றார்.

திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த திரு.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது,” என்றார்.

வேறொரு விவகாரம் குறித்துப் பேசிய அவர், வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றார்.

“பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் அழைத்துப் பேசியுள்ளார். இரு நாள்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் நானும் பேசவுள்ளேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்