மயிலாடுதுறை: பழம்தமிழரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் நகரின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையில், பூம்புகார் ஆழ்கடலில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின.
தமிழகப் பள்ளிக் கல்வி, தொல்லியல்துறை அமைச்சர் ராஜ்மோகன், தொல்லியல்துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோருடன் இணைந்து ஆழ்கடல் நீச்சல் (ஸ்கூபா டைவ்) மேற்கொண்டு, கடலுக்குள் சென்று அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்தார்.
முன்னதாக, தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் 2025, 2026ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாகக் கடல்சார் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் பண்டைக்கால பூம்புகாரின் கட்டட அமைப்புகள், சுற்றுச்சுவர், செங்கற்கள், பானையோடுகள், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் உள்ளிட்ட பல அரிய சான்றுகள் கண்டறியப்பட்டன.
தற்போது, பூம்புகார் கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில் 3ஆம் கட்ட ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ராஜன் தலைமையிலான தொல்லியல்துறை அலுவலர்கள், வல்லுநர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர், அதிநவீன நீச்சல் கருவிகள், நவீன கேமராக்களுடன் களமிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளின் பானையோடுகள், கட்டடச் சுவர்கள், பூம்புகார் ஒரு அனைத்துலக வணிக, பண்பாட்டு நகரமாகத் திகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், சிந்துவெளி நாகரிகமும் சங்க இலக்கியமும் இணைந்த புள்ளியை நிரூபிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


